ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட 5 கடைகள் அகற்றம்
ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட 5 கடைகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.;
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பஸ் நிலைய பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் அனுமதி இல்லாமல் நகர்வு கடைகள், ஆவின் பூத் உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த கடைகள் வாகன போக்குவரத்திற்கும், பொதுமக்கள் நடந்து சென்று வருவதற்கும் இடையூறாக இருப்பது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊட்டி நகராட்சி அதிகாரிகள் அனுமதி இல்லாத கடைகளை காலி செய்யக்கோரி அப்புறப்படுத்தினர். சில நாட்களில் மீண்டும் அதே பகுதியில் கடைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தூய்மை பணியில் ஈடுபடுவதற்காக, பஸ் நிலையத்தையொட்டி இருந்த ஒரு கடை, பழக்கடைகள் மட்டும் அகற்றப்பட்டது.
ஆனால், மீண்டும் அந்த கடைகள் அதே இடத்தில் வைக்கப்பட்டு செயல்பட்டன. இதுகுறித்து தொடர்ந்து புகார் எழுந்ததால், நேற்று ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர்கள் ராஜேந்திரன், பிரகாஷ், நகராட்சி பொறியாளர் ரவி, தாசில்தார் தினேஷ் மற்றும் அதிகாரிகள் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டு இருந்த கடைகளை காலி செய்ய வேண்டும் என்று கடை வியாபாரிகளிடம் தெரிவித்தனர். அப்போது நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றதற்கான ரசீது மற்றும் கடிதத்தை சிலர் காண்பித்தனர்.
அதனை சரிபார்த்த நகராட்சி திட்டமைப்பு அதிகாரி இளங்கோவன், வேறு இடத்தில் கடை வைப்பதற்கு அனுமதி வாங்கி விட்டு நெடுஞ்சாலையில் கடை வைக்கப்பட்டு உள்ளது என்று கூறினார். இதையடுத்து ½ மணி நேரத்தில் கடைகளை காலி செய்யும் படி அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் கடை வியாபாரிகள் தாங்களாகவே பொருட்களை வெளியே எடுத்து வைத்தனர். ஆவின் பூத் மற்றும் இரண்டு கடைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் அங்கிருந்து அகற்றி அப்புறப்படுத்தப்பட்டது.
ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட 5 கடைகள் அகற்றப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் அனுமதிக்கப்பட்ட கடை அகற்றவில்லை. பஸ் நிலையத்தையொட்டி மீன் வளத்துறை கட்டுப்பாட்டில் இருந்த வருவாய்த்துறை நிலத்தில் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் நிறுத்த இடம் வழங்கப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் வருவாய்த்துறை அனுமதி இல்லாமல் போக்குவரத்துக் கழகம் 3 கடைகள், பாதுகாப்பு அலுவலகம் கட்டும் பணி நடந்ததை வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். உடனடியாக கட்டுமான பணிகளை நிறுத்துமாறு உத்தரவிட்டனர். கட்டப்பட்டு உள்ள கட்டிடங்களை அகற்றும்படியும் போக்குவரத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறியதாவது:-
ஊட்டி மத்திய பஸ் நிலையம், ஏ.டி.சி., புளுமவுண்டன் சாலை ஆகிய பகுதிகளில் மக்கள் அதிகளவில் கூடுகின்றனர். அப்பகுதியில் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கடைகளை வைத்து உள்ளனர். இந்த கடைகளை முறையாக அப்புறப்படுத்தாமல், பஸ் நிலைய பகுதியில் மட்டும் திடீர், திடீரென அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். மீண்டும் அதே இடத்தில் 2 நாட்களில் கடை வைக்கப்படுகிறது. இதனால் கடை நடத்துபவர்கள் பாதிக்கப்படுவதுடன், அதிகாரிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, உரிய நடவடிக்கை எடுத்து கடைகளை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும். அனுமதி பெற்றவர்களுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாத இடங்களில் கடை வைக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.