குடியாத்தம் அருகே கோவில்களில் வழிபாடு நடத்த அனுமதி மறுப்பு கிராமமக்கள் முட்டிபோட்டபடி வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்

குடியாத்தம் அருகே கே.ஏ.மோட்டூர் கிராமத்தில் உள்ள கோவில்களில் வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது என்று முட்டிபோட்டபடி வந்து கிராம மக்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர்.;

Update:2019-02-05 03:00 IST
வேலூர், 

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதி கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக கொடுத்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அருகேயுள்ள பனந்தோப்பு கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி விளையாட்டு மைதானத்தை சிலர் ஆக்கிரமித்து குடிசை அமைத்தும், விவசாயம் செய்தும் வருகின்றனர். மேலும் சிலர் குப்பை கொட்டும் கிடங்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். இளைஞர்கள் விளையாடுவதற்கு வசதியாக விளையாட்டு மைதானத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

வேலூர் கொணவட்டத்தை சேர்ந்த சரவணன் அளித்த மனுவில், வேலூர் பாலாற்றங்கரை அருகே உள்ள முத்துமண்டபம் இலங்கையை ஆண்ட கடைசி தமிழ்மன்னன் விக்கிரம ராஜசிங்கன் நினைவாக கட்டப்பட்டது. அவரின் நினைவு நாளையொட்டி கடந்த 40 ஆண்டுகளாக குருபூஜை நடத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஒரு சமூகத்தினர் மன்னரை சொந்தம் கொண்டாடி வருகின்றனர். எனவே விக்கிரம ராஜசிங்கன் வரலாற்றையும், அந்த சமூகத்தினரின் வரலாற்றையும் தெளிவுபடுத்தி, தமிழர்களின் உரிமையை மீட்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

குடியாத்தம் தாலுகா கே.ஏ.மோட்டூர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது தூரம் முட்டி போட்டபடி வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், எங்கள் ஊரில் உள்ள கெங்கையம்மன் கோவில் திருவிழா ஊர் பொதுமக்கள் சார்பாக நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருதரப்பினர் கெங்கையம்மன் கோவில் திருவிழாவை பங்குனி மாதம் மற்றும் சித்திரை மாதமும் நடத்துகின்றனர்.

மேலும் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பஜனை கோவில், வலம்புரி செல்வவிநாயகர் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் உள்ளன. இரு தரப்பினரும் கோவில்களில் பூஜை செய்துவிட்டு, பூட்டிவிட்டு செல்கின்றனர். அதனால் கோவில்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அதனால் பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இருதரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு திருவிழா, கும்பாபிஷேகம் நடத்த விழாக்குழு அமைக்க வேண்டும். பொதுமக்களின் ஒப்புதலின்படி கெங்கையம்மன் கோவில் ஒரே திருவிழாவாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் மனுவில் கூறியிருந்தனர்.

பேரணாம்பட்டு அருகேயுள்ள கள்ளிப்பேட்டை கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்துக்கும், கோட்டை காலனிக்கும் சுடுகாடு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில், கோட்டை காலனி மக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு தலைபட்சமாக வழங்கப்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பாக விசாரித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

பேரணாம்பட்டு அருகேயுள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதியின் நடுவே திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வேறு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்