தென்மத்திய மும்பை தொகுதியை ‘இந்திய குடியரசு கட்சிக்கு விட்டு கொடுக்க வேண்டும்’ - ராம்தாஸ் அத்வாலே
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தென்மத்திய மும்பை தொகுதியை இந்திய குடியரசு கட்சிக்கு விட்டு கொடுக்க வேண்டும் என சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயை மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தி உள்ளார்.;
மும்பை,
மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ராம்தாஸ் அத்வாலே தென்மத்திய மும்பை தொகுதியை குறி வைத்து உள்ளார். அவர் அந்த தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கு ஏற்கனவே விருப்பம் தெரிவித்து உள்ளார்.
குட்டித் தமிழ்நாடு என வர்ணிக்கப்படும் தாராவியும் தென்மத்திய மும்பை தொகுதியில் உள்அடங்கி இருக்கிறது. கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் இருந்து சிவசேனாவை சேர்ந்த ராகுல் செவாலே வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
ஆனால் இந்த முறை அந்த தொகுதியை சிவசேனா தனக்கு விட்டுத்தர வேண்டும் என ராம்தாஸ் அத்வாலே கூறி வருகிறார். மும்பையில் நேற்று முன்தினம் நடந்த கட்சி கூட்டத்தில் பேசிய அவர், இதையே வலியுறுத்தினார். அப்போது அவர் கூறுகையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இந்த முறை நான் போட்டியிடுவதற்கு வசதியாக தென்மத்திய மும்பை தொகுதியை பெருந்தன்மையுடன் இந்திய குடியரசு கட்சிக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்.
சிவ் சக்தியும், பீம் சக்தியும் ஒன்றிணைய வேண்டும் என்ற பாலாசாகேப் தாக்கரேயின் கனவை நிறைவேற்ற 2 கட்சிகளும் (சிவசேனா, இந்திய குடியரசு கட்சி) சேர்ந்தே இருக்க வேண்டும் என்றார்.