ரூ.30 ஆயிரத்து 692 கோடி மதிப்பீட்டில் மும்பை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்
c ரூ.30 ஆயிரத்து 692 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அந்தேரி- மலாடு இடையே ரூ.450 கோடியில் பறக்கும் சாலை அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.;
மும்பை,
நாட்டின் பணக்கார மாநகராட்சியான மும்பை மாநகராட்சியின் 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் அஜாய் மேத்தா ரூ.30 ஆயிரத்து 692 கோடியே 59 லட்சத்துக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் அறிக்கையை நிலைக்குழு தலைவர் யஸ்வந்த் ஜாதவ் பெற்றுக்கொண்டார்.
இது கடந்த ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட தொகையை விட 12.60 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு ரூ.27 ஆயிரத்து 58 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
பட்ஜெட்டில் வரிகள் எதுவும் உயர்த்தப்படவில்லை. புதிய வரிகளும் விதிக்கப்படவில்லை. பட்ஜெட்டில் சுகாதாரம், கல்வி, பாலம், சாலை உள்ளிட்டவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு உள்ளது.
மாநகராட்சி பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
*மும்பையில் மெரின்டிரைவ் பிரின்சஸ் தெரு பகுதியில் இருந்து காந்திவிலிக்கு கடற்கரையையொட்டி சாலை அமைக்கப்படுகிறது. 29.20 கி.மீ. தூரத்துக்கு அமைய உள்ள இந்த கடற்கரை சாலை ரூ.15 ஆயிரம் கோடி செலவில் 4 ஆண்டுகளுக்குள் போடப்பட உள்ளது. கடற்கரை சாலை திட்டம் மும்பை மாநகராட்சி நிதியில் இருந்து நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மேற்கு புறநகர் பகுதியை சேர்ந்த மக்கள் எளிதில் தென்மும்பை பகுதிக்குள் வர முடியும். மேலும் நகர் புறப்பகுதியிலும், மேற்கு விரைவு சாலையிலும் போக்குவரத்து வெகுவாக குறையும். கடற்கரை சாலை திட்டம் நிறைவேறினால் அது மும்பைவாசிகளுக்கு வரமாக அமையும்.
கடற்கரை சாலை திட்டப்பணிகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. அமர்சன்ஸ் பூங்கா, ஹாஜி அலி ஜங்ஷன், ஒர்லி கடற்கரை பகுதி உள்ளிட்ட இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. கடற்கரை சாலை திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.1,600 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
* புறநகர் மும்பையின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இணைக்கும் வகையில் கோரேகாவ்- முல்லுண்டு இணைப்பு சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான முதல் கட்டப்பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
* மும்பையில் சாலைகள், வெள்ளநீர் வடிகால், பாலங்கள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.11 ஆயிரத்து 480 கோடியே 42 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
* மும்பை பெருநகரத்தில் அடிக்கடி அடுக்குமாடி கட்டிடங்களிலும், குடிசை பகுதிகளிலும் தீ விபத்து ஏற்படுகின்றன. எனவே தீயணைப்புத்துறையை மேம்படுத்தும் வகையில் பட்ஜெட்டில் ரூ.201 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தீயணைப்புத்துறைக்கு 64 மீட்டர் உயரம் கொண்ட நவீன ஏணிகள், டிஜிட்டல் மொபைல் ரேடியோ சிஸ்டம், ஹைட்ராலிக் மீட்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வாங்கப்பட உள்ளன.
நாட்டிலேயே தீயணைப்புத்துறைக்கு ஒதுக்கப்பட்ட அதிக தொகை இது தான் என கூறப்படுகிறது.
* மும்பையில் நஷ்டத்தில் இயங்கும் பெஸ்ட் குழுமத்துக்கு நிதியுதவியாக பட்ஜெட்டில் ரூ.34 கோடியே 10 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் பெஸ்ட் ஊழியர்களின் நலனுக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
* பட்ஜெட்டில் பொது சுகாதார பணிகளுக்கு ரூ.4 ஆயிரத்து 151 கோடியே 14 லட்சமும், மும்பை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.3 ஆயிரத்து 323 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
* தாதர் சிவாஜி பார்க்கில் உள்ள பாரம்பரிய கட்டிடமான மேயர் பங்களா மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேயின் நினைவிடம் அமைக்க ஒப்படைக்கப்பட்டு விட்ட நிலையில், சிவாஜி பார்க்கில் 2 ஆயிரத்து 745 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய மேயர் பங்களா கட்டப்படுகிறது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் இந்த நிதியாண்டில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
* அந்தேரி லோகண்ட்வாலா- மலாடு லகுண்சாலை வரை ரூ.450 கோடி செலவில் பறக்கும் சாலை அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
* தேவ்னாரில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
* பைகுல்லா ராணி பூங்காவில் ஓநாய், புலி, சிங்கம், கழுதை புலி, அரியவகை மான் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பறவைகளை பார்வைக்கு வைப்பதற்காக 17 பிரத்யேக உறைவிடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்காக பட்ஜெட்டில் ரூ.110 கோடியே 78 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
* பாந்திராவில் உள்ள கே.பி.பாபா ஆஸ்பத்திரி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
* பகவதி ஆஸ்பத்திரி மறுசீரமைப்பு பணிக்கு ரூ.40 கோடி, எம்.டி.அகர்வால் ஆஸ்பத்திரி விரிவாக்க பணிக்கு ரூ.35 கோடி, ஆர்.என்.கூப்பர் ஆஸ்பத்திரியில் மருத்துவ கல்லூரி கட்டிடம் கட்ட ரூ.35 கோடி, கோவண்டியில் ஆஸ்பத்திரி கட்ட ரூ.40 கோடி, சயான் ஆஸ்பத்திரி மறுசீரமைப்பு பணிக்கு ரு.10 கோடி, நாயர் பல் மருத்துக்கல்லூரி விரிவாக்கத்திற்கு ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
* மும்பை குடிசை பகுதிகளில் புதிய கழிவறைகள் கட்டவும், கழிவறைகளுக்கு தண்ணீர், மின்சாரம் சப்ளை வழங்கவும் பட்ஜெட்டில் ரூ.104 கோடியே 47 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
* பணிபுரியும் பெண்கள் தங்குவதற்கு வசதியாக கோரேகாவில் 16 மாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.