தலைமை ஆசிரியை இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

தலைமை ஆசிரியை இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் வகுப்பை புறக்கணித்தனர்.;

Update:2019-02-06 03:30 IST

களக்காடு, 

தலைமை ஆசிரியை இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் வகுப்பை புறக்கணித்தனர்.

தொடக்கப்பள்ளி மாணவர்கள்

களக்காடு அருகே உள்ள கீழகருவேலன்குளத்தில் டி.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளி உள்ளது. மஞ்சுவிளை சேகரத்தின் கீழ் செயல்படும் இந்த பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியையாக தங்ககனி தமிழ்செல்வி (வயது 50), உதவி தலைமை ஆசிரியையாக ஐவில்தா நேசகுமாரி ஆகிய 2 ஆசிரியைகள் மட்டும் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளிக்கூடத்தில் 30–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவ–மாணவிகள் காலையில் பள்ளிக்கூடத்திற்கு வருவதற்கும், பள்ளி முடிந்ததும் மாலையில் ஆட்டோ, கார்களில் வீடு செல்வதற்கும் தலைமை ஆசிரியை தனது சொந்த செலவில் உதவிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கூட நிர்வாகம் உத்தரவின்பேரில், தலைமை ஆசிரியை தங்ககனி தமிழ்செல்வி வேறு பள்ளிக்கூடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வகுப்பு புறக்கணிப்பு

நேற்று காலையில் வழக்கம்போல் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. அப்போது பள்ளிக்கூடத்திற்கு புதிய தலைமை ஆசிரியையாக ஞானவடிவு என்பவர் வந்திருந்தார். இதனால் தலைமை ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் வீட்டிற்கு திரும்ப அழைத்துச் சென்றனர். இதனால் மாணவர்கள் இன்றி வகுப்புகள் வெறிச்சோடி காணப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மேரி சந்திரபாய் (வயது 87) என்பவர் கூறுகையில், “இந்த பள்ளிக்கூடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிறது. இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் பலர் பல்வேறு துறையில் உயர் அதிகாரிகளாக உள்ளனர். எனவே பள்ளிக்கூடத்தின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். இடமாற்றம் செய்யப்பட்ட தலைமையாசிரியை மீண்டும் இங்கு பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகள்