வேளாங்கண்ணி அருகே திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் சேமிக்கும் பணி மும்முரம்

வேளாங்கண்ணி அருகே திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகளை சேமிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-02-06 22:45 GMT
வேளாங்கண்ணி,

திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் மேட்டூர் அணையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து டெல்டா விவசாயிகள் நேரடி சம்பா நெல் சாகுபடி செய்திருந்தனர். மேலும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை காப்பாற்றி வந்ததாகவும், இந்த சம்பா அறுவடையில் குறைந்த அளவே மகசூல் கிடைத்ததாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இந்தநிலையில் கீழையூர் ஒன்றியத்தில் சம்பா நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய அதிகளவில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகளை சேமிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் காரை நகரில் உள்ள திறந்த வெளி சேமிப்பு கிடங்கில் சேமிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக இந்த பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேமிக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்