சேலத்தில் பரபரப்பு: பட்டுச்சேலை, தாலியுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த இளம்பெண்

சேலத்தில் திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பட்டுச்சேலை, தாலியுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு இளம்பெண் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-26 23:00 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் செம்மனூர் அருகே உள்ள அரங்கனூர் கிராமம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் கவுரி(வயது 19). இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். கவுரி நேற்று தனது தாய் ஈஸ்வரி மற்றும் உறவினர்களுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

அப்போது அவர் தாம்பூலத்தட்டில் தாலி, பட்டுச்சேலை, வேட்டி ஆகியவற்றை கொண்டு வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் இளம்பெண் கவுரி கூறியதாவது:-

நானும், எனது ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இதற்கிடையில் அவருடன் நெருங்கி பழகியதால் நான் கர்ப்பம் ஆனேன். இதையடுத்து அவரிடம் என்னை திருமணம் செய்யும்படி வற்புறுத்தினேன். அப்போது அவர் கருவை கலைத்துவிட்டு வந்தால் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். அதன்படி, நானும் கருவை கலைத்தேன்.

அதன்பிறகும் அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். இதுகுறித்து மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அவரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, என்னை திருமணம் செய்து கொள்வதாக போலீசாரிடம் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து நேற்று(நேற்று முன்தினம்) அங்காளம்மன் கோவிலில் வைத்து எங்கள் இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பட்டுவேட்டி, தாலி ஆகியவை வாங்கி விட்டோம்.

ஆனால், அந்த வாலிபர் திடீரென அவரது பெற்றோர் கூறியதை கேட்டு என்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். எனவே என்னை காதலித்து ஏமாற்றிவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இதுதொடர்பாக அவர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தார்.

மேலும் செய்திகள்