மாவட்ட செய்திகள்
திருப்பூரில் பிரபல சினிமா தியேட்டரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

திருப்பூரில் பிரபல சினிமா தியேட்டரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
திருப்பூர், திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் ஸ்ரீசக்தி சினிமாஸ் என்ற பெயரில் ஒரே கட்டிடத்தில் 4 தியேட்டர்கள் உள்ளன. சென்னையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலையில் 2 கார்களில் இந்த தியேட்டர் வளாகத்துக்கு வந்துள்ளனர். போலீசார் தியேட்டர் வளாகத்தில் நின்று பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். பின்னர் தியேட்டருக்குள் சென்று அங்கிருந்த அலுவலக அறைகளில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். 2 குழுவாக சென்று அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். தியேட்டரில் வேலை செய்த ஊழியர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதுபோல் வெளியே இருந்து யாரும் தியேட்டருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.அதிகாரிகளின் சோதனையை தொடர்ந்து 4 தியேட்டர்களிலும் நேற்று ‘காலை காட்சி இல்லை’ என்று அறிவிக்கப்பட்டு, தியேட்டர் வளாக நுழைவுவாசலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் அதிகாரிகளின் சோதனை தொடர்ந்து நடந்தது. இதானால் காட்சிகள் இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டன. நேற்று இரவு வரை சோதனை தொடர்ந்தது. இருப்பினும் ரசிகர்கள் காலை முதல் தியேட்டருக்கு வந்த வண்ணம் இருந்தனர். நுழைவுவாசல் கதவு பூட்டப்பட்டு இருந்தது. தியேட்டர் ஊழியர்கள், ‘இன்று(நேற்று) காட்சிகள் கிடையாது. நாளை வாருங்கள்’ என்று கூறி அனுப்பி வைத்தனர். இதனால் எதற்காக காட்சிகள் இல்லை என்று ரசிகர்கள் விவரம் கேட்டனர். அவர்களை அங்கிருந்து உடனடியாக அனுப்பி வைப்பதில் ஊழியர்கள் முனைப்பாக இருந்தனர்.திருப்பூர் கே.பி.என்.காலனியில் உள்ள தியேட்டரின் உரிமையாளர் சுப்பிரமணியம் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக தெரிகிறது. வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. சுப்பிரமணியம் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகியாகவும், திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க நிர்வாகியாகவும் உள்ளார்.திருப்பூரில் உள்ள பிரபல தியேட்டரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.