குருவராஜபாளையத்தில் காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

குருவராஜபாளையத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-07 22:00 GMT
அணைக்கட்டு,

மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருவராஜ பாளையம் ஊராட்சியின் ஒருபகுதிக்கு மட்டும் கடந்தசில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சரிவர குடிநீர் வழங்காததை கண்டித்து நேற்று காலை 11 மணிக்கு ஒடுகத்தூர்- வேலூர் சாலையில் 50-க்கும் மேற்பட்டோர் காலிகுடங் களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று மறியலில் ஈடுபட்டவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் எங்கள் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். 30 ஆயிரம் மற்றும் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக குடிநீர் தொட்டி ஆபரேட்டர் பாபு என்ற மரியா என்பவர் சரிவர குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றாமல், இரவுநேர காவலர் பணிக்கு சென்றுவிடுகிறார். இதனால் குடிநீர் ஏற்றுவதற்கு ஆபரேட்டர் இல்லாமல் குடிநீர் வழங்குவதில்லை.

இதுகுறித்து மாதனூர் வட்டாரவளர்ச்சி அலுவலர் கள் ராஜலட்சுமி மற்றும் யுவராஜ் ஆகியோரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே இரவு காவலர் பணிக்கு செல்லும் அவரை மாறுதல் செய்துவிட்டு, வேறு ஆபரேட்டரை நியமித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சரவணன், வட்டாரவளர்ச்சி அலுவலரை போனில் தொடர்பு கொண்டு பேசியதற்கு, உடனடியாக அந்தப்பகுதிக்கு குடிநீர் வழங்குவதாகவும், முறையாக குடிநீர் வழங்காத ஆபரேட்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை தற்காலிக ஆபரேட்டரை நியமித்து தொடர்ந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். அதைத் தொடர்ந்து பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்