சென்னை யானைக்கவுனியில் மும்பைக்கு பார்சலில் அனுப்ப இருந்த ரூ.60 லட்சம் தங்கம் பறிமுதல் வருவாய் புலனாய்வு துறையினர் அதிரடி

சென்னை யானைகவுனியில் இருந்து மும்பைக்கு உரிய ஆவணங்கள் இன்றி பார்சலில் அனுப்ப இருந்த ரூ.60 லட்சம் மதிப்பிலான 2 தங்க கட்டிகள் மற்றும் 3 தங்க காசுகளை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-08 22:45 GMT
பிராட்வே,

சென்னை யானைக்கவுனி என்.எஸ்.சி. போஸ் சாலையில் நேற்றுமுன்தினம் இரவு 1 மணியளவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அங்குள்ள ஒரு தனியார் கூரியர் சர்வீசுக்கு சொந்தமான வேனில், பார்சல்களை ஏற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அந்த பார்சல்கள் குறித்து கூரியர் நிறுவன மேலாளர் முரளியிடம் போலீசார் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

அதில் வேனில் ஏற்றப்பட்ட பார்சலில் முறைகேடான பதுக்கல் தங்க கட்டிகள் இருப்பது தெரிந்தது. இதுபற்றி வருவாய் புலனாய்வு துறை கண்காணிப்பாளர்கள் ஜெயராமன், தணிகைவேல் ஆகியோருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள், பார்சலை பிரித்து சோதனை செய்தனர்.

அதில் தலா 1 கிலோ எடை கொண்ட 2 தங்க கட்டிகள் மற்றும் 50 கிராம் எடை கொண்ட 3 தங்க காசுகள் இருந்தது. ஆனால் அது தொடர்பான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அந்த தங்க கட்டிகள் மற்றும் தங்க காசுகளை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது தொடர்பாக கூரியர் சர்வீஸ் உரிமையாளர் பர்வேஸ், மேலாளர் முரளி ஆகியோரை மாவட்ட வருவாய் புலனாய்வு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அதில் அந்த தங்க கட்டிகளை சென்னையில் இருந்து மும்பை அனுப்ப இருந்ததாக தெரிவித்தனர். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்