கொழும்பு, துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.41 லட்சம் தங்கம் சிக்கியது ரூ.2½ லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளும் பறிமுதல்

கொழும்பு, துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.41 லட்சம் தங்கம் மற்றும் ரூ.2½ லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-08 22:30 GMT

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு திரும்பி வந்த சென்னையை சேர்ந்த 3 வாலிபர்களிடம் சந்தேகத்தின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர்.

அவர்களிடம் இருந்த உடைமைகளில் எதுவும் இல்லாததால் 3 பேரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் 3 பேரின் உள்ளாடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள 900 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரிடம் நடத்திய சோதனையில், அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.11 லட்சம் மதிப்புள்ள 330 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் சுற்றுலா விசாவில் துபாய் சென்றுவிட்டு சென்னை திரும்பிய சென்னையை சேர்ந்த வாலிபரின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் விலை உயர்ந்த சிகரெட்டுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டனர். அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்டுகளை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் நடந்த சோதனையில் 5 பேரிடம் இருந்து ரூ.41 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 230 கிராம் தங்கம் மற்றும் ரூ.2½ லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், பிடிபட்ட 5 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு செல்ல வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அந்த விமானத்தில் செல்ல வந்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் அவரிடம் இருந்த டிராலி சூட்கேசில் கைப்பிடிகளுக்கு இடையே ரூ.27 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த பணத்தை அவர் யாருக்காக கொழும்புக்கு கடத்த முயன்றார்?, அது ஹவாலா பணமா? என பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்