ஈரோட்டில் கோவில் முன்பு ஜவுளி வியாபாரி தீக்குளிப்பு குடிப்பழக்கத்தை விட முடியாததால் விபரீத முடிவு

ஈரோட்டில் குடிப்பழக்கத்தை விட முடியாததால் கோவில் முன்பு ஜவுளி வியாபாரி தீக்குளித்தார்.

Update: 2019-03-09 22:45 GMT

ஈரோடு,

ஈரோடு பழையபாளையம் அம்பிகை நகரை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 56). ஜவுளி வியாபாரியான இவர் சந்தை நடக்கும் இடத்தில் வேட்டி விற்பனை செய்து வருகிறார். இவருடைய மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு தினேஷ்வரன் (26), தீனதயாளன் (23) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

முரளிதரனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அவர் அடிக்கடி மது அருந்தி வந்தார். குடிப்பழக்கத்தை கைவிட நினைத்த அவரால் மது குடிக்காமல் இருக்க முடியவில்லை. மேலும், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருந்ததால் அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணிஅளவில் ஈரோடு சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு அம்மனை கும்பிட்டுவிட்டு மெதுவாக நடந்து வெளியே வந்தார். அதன்பின்னர் கோவிலின் முன்பு நின்றிருந்த முரளிதரன், அங்கு மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து திடீரென தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். உடல் முழுவதும் தீ மளமளவென பரவியது. இதைப்பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் விரைந்து சென்று முரளிதரன் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முரளிதரனிடம், ஈரோடு 3–ம் எண் மாஜிஸ்திரேட்டு முருகன் வாக்குமூலம் பெற்றார்.

மேலும் செய்திகள்