அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தது என்.ஆர். காங்கிரசின் பலவீனம் -நாராயணசாமி சொல்கிறார்

அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தது என்.ஆர். காங்கிரசின் பலவீனம் என்று நாராயணசாமி கூறினார்.

Update: 2019-03-10 23:45 GMT
புதுச்சேரி,

புதுப்பிக்கப்பட்ட காங்கிரஸ் அலுவலகம் திறப்பு விழாவிற்கு பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் இணைந்து சந்திக்க உள்ளது. கடந்த 2¾ ஆண்டுகளாக புதுவையில் காங்கிரஸ் அரசு என்ன செய்தது என்பதை கூறி வாக்கு சேகரிப்போம். அதுபோல் மத்திய பா.ஜ.க. அரசில் நடந்த வேதனைகளான வேலை வாய்ப்பின்மை, பணம் மதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு, விலைவாசி உயர்வு, வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எடுத்துக்கூறி வாக்குகள் சேகரிப்போம்.

புதுவையில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மதுபானம் விற்பனையில் ரூ.150 கோடி வருமானம் உயர்த்தி உள்ளோம். மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதி. ராகுல்காந்தி பிரதமராவர். புதுவைக்கு நிறைய நிதி கிடைக்கும்.

எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி கடந்த 2½ ஆண்டுகளாக வாய்மூடி மவுனமாக இருந்தார். என்.ஆர்.காங்கிரஸ் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படாமல், எதிரி கட்சியாக உள்ளது. அவர் சட்டசபையில் விவாதங்களில் பங்கேற்பதில்லை. அதே சமயம் திரைமறைவாக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி ஆட்சிக்கு தொல்லை கொடுக்கும் வேலையை பார்த்தார். சிலரிடம் அவரே நேரடியாக பேரம் பேசியதற்கான ஆதாரங்களும் எங்களிடம் வந்துள்ளது.

கடந்த 2½ ஆண்டு காலமாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் தூங்கிக்கொண்டிருந்தார். தற்போது தேர்தலை முன்னிட்டு அவர் திடீரென செயல்படுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது 3 தொகுதிகளுக்கு மட்டும்தான் முதல்-அமைச்சர் நிவாரணம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது 30 தொகுதிகளுக்கும் பரவலாக முதல்-அமைச்சர் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. ஏழைகளின் மருத்துவ செலவுக்கும், மாணவர்கள் வெளிமாநிலங்களில் சென்று போட்டி தேர்வில் பங்கேற்கவும் முதல்-அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்கியுள்ளோம்.

ரங்கசாமிக்கு அமைச்சர், முதல்-அமைச்சர் பதவி கொடுத்த சோனியா காந்தியின் முதுகில் குத்தினார். 2011-ம் ஆண்டு மாநில அந்தஸ்து கேட்டுதான் தனிகட்சி தொடங்கி பிரசாரம் செய்தார். அதை நம்பிதான் மக்களும் வாக்களித்தனர். அப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தார். தேர்தலில் வெற்றி பெற்றால் 2 பேருக்கு அமைச்சர் பதவி வழங்குவதாகவும் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் வாக்குறுதி அளித்தார். வெற்றி பெற்ற பிறகு ஜெயலலிதாவை திரும்பிகூட பார்க்கவில்லை. 2 பேருக்கு அமைச்சர் பதவியையும் வழங்கவில்லை.

தற்போது அ.தி.மு.க.வுடன் சந்தர்ப்பவாத கூட்டணி வைத்துள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த கூட்டணியை அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏற்கிறார்களா? சிறுபான்மை இனமக்களுக்கு துரோகம் இழைத்து, புதுச்சேரிக்கு வளர்ச்சியும், நிதியும் தராத பா.ஜ.க.வுடன் என்.ஆர்.காங்கிரசும், அ.தி.மு.க.வும் கூட்டணி வைத்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து என்.ஆர்.காங்கிரஸ் பலவீனமாகவிட்டது. சொந்தகாலில் நிற்கும் தகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு இல்லை. என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமிக்கு எங்களை குறை கூற அருகதையில்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோரின் வாக்குகளை இழந்துவிட்டனர்.

தே.மு.தி.க.வை சேர்ந்த பிரேமலதா தி.மு.க.வை தரைக்குறைவாக விமர்சிப்பது அரசியலுக்கு ஏற்றதல்ல. தே.மு.தி.க. ஒரே நேரத்தில் தி.மு.க.வுடனும், அ.தி.மு.க.வுடனும் கூட்டணி பேசியது. ஆனால் பேரம் எடுபடவில்லை. தி.மு.க. கூட்டணி கதவை மூடிவிட்டதாக கூறியது. உடனே அ.தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தி.மு.க.வை தரைக்குறைவாக பேசியுள்ளார். பிரேமலதா தான் ஒரு தரம்தாழ்ந்த அரசியல்வாதி என்பதை காட்டியுள்ளார்.

கவர்னர் அலுவலகம் முன்பு நாங்கள் தர்ணா போராட்டம் நடத்தியதை நாடகம் என்று ரங்கசாமி கூறியுள்ளார். இதன் மூலம் அவரது அரசியல்ஞானம் இவ்வளவுதான் என்பது தெரிய வந்துள்ளது. மக்கள் நலனுக்காக கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தினோம்.

பேராட்டத்தின் மூலம் நாங்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ரேஷனில் இலவச அரிசி கொடுக்க இருக்கிறோம், 10 ஆயிரம் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்கியுள்ளோம், ரோடியர் மில்லில் விருப்பஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை வழங்க ஒப்புக்கொண்டுள்ளார். ஆசிரியர் மற்றும் காவலர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யவுள்ளோம். ஆட்சியாளர்களுக்கு நிதி அதிகாரம் தொடர்பான கோப்புக்கு ஏப்ரல் 1-ந் தேதிக்குள் முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இவையெல்லாம் போராட்டத்தின் விளைவாகத்தான் கிடைத்தது. நாங்கள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரை போல் நேருவீதியில் உள்ள வாட்ச் கடையில் அமர்ந்து அரசியல் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்