ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டதாக கூறி விவசாயியின் வங்கி கணக்கில் ரூ.35 ஆயிரம் மோசடி

ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டதாக கூறி விவசாயியின் வங்கி கணக்கில் ரூ.35 ஆயிரம் மோசடி செய்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-03-11 22:15 GMT
மெலட்டூர்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மேலசெம்மங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. விவசாயியான இவர் அம்மாப்பேட்டையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். கடந்த வாரம் நாராயணசாமியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர், ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டதாகவும், அதை மாற்றி தருவதாகவும் கூறி உள்ளார். அதற்கு நாராயணசாமி, வங்கிக்கு சென்று ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொள்வதாக கூறி உள்ளார். ஆனாலும் அந்த நபர் தொடர்ந்து நாராயணசாமியிடம் பேச்சுக்கொடுத்தார். அப்போது நாராயணசாமி தனது ஏ.டி.எம். கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று நாராயணசாமி தனது வங்கி கணக்கு விவரங்களை சரிபார்த்தபோது அதில் இருந்து ரூ.35 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் செல்போனில் பேசிய நபர், ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டதாக கூறி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து நாராயணசாமி உடனடியாக தனது வங்கி கணக்கை முடக்கி வைத்தார். இதுகுறித்து மெலட்டூர் போலீஸ் நிலையத்தில் நாராயணசாமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டதாக கூறி விவசாயியின் வங்கி கணக்கில் ரூ.35 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்