தஞ்சை காந்திஜி சாலையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் கடும் அவதி

தஞ்சை காந்திஜி சாலையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

Update: 2019-03-12 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை நகரின் இதய பகுதியான பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலையில் இருந்து ரெயில் நிலையம் வரை உள்ள சாலைக்கு காந்திஜி சாலை என்று பெயர். இந்த சாலையில் அண்ணா சிலையில் இருந்து ஆற்றுப்பாலம் அருகே உள்ள இர்வின் பாலம் வரையில் சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன.

ஜவுளி கடைகள், ஓட்டல்கள், செருப்பு கடைகள், நகை கடைகள், மருந்து கடைகள், புத்தக கடைகள் உள்ளிட்ட கடைகள் இருப்பதால், காந்திஜி சாலை எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். முக்கியமான இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த சாலையில் உள்ள கடைகளுக்கு செல்பவர்கள் அதிலும் குறிப்பாக இங்கு உள்ள ஜவுளி கடைக்கு செல்பவர்கள் தங்களுடைய இருசக்கர வாகனங்களை சாலை ஓரத்திலேயே நிறுத்தி விட்டு செல்வார்கள். இதனால் ஒரே நேரத்தில் எதிர் எதிரே பஸ் மற்றும் வாகனங்கள் வந்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பகுதியை வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் கடந்து செல்கிறார்கள்.

இந்த சாலையில் சுற்றுலாத்துறை சார்பில் ராசாமிராசுதார் மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டது. இது ஏற்படுத்தப்பட்டு சில மாதங்கள் மட்டுமே இருசக்கர வாகனங்கள் இந்த பகுதியில் நிறுத்தப்பட்டன. போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் நின்று இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதை கட்டுப்படுத்தி வந்தனர். நாளடைவில் மீண்டும் இருசக்கர வாகனங்கள் சாலை ஓரத்திலேயே நிறுத்தப்பட்டு வருகின்றன.

சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன.

இந்த சாலையில் உள்ள ஜவுளி கடைகளின் முன்பு வாகனங்கள் அதிக அளவில் தாறுமாறாக நிறுத்தப்படுவதே போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து போலீசார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அதிரடிப்படையினர் இரவு நேரங்களில் அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டதோடு, வாகனம் நிறுத்தியவர்களிடம் உடனடியாக அபராதமும் வசூலித்தனர். இந்த நடவடிக்கை தொடரவில்லை.

இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக மீண்டும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

தஞ்சை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் காந்திஜி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்