தஞ்சை நேரடி கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள் விவசாயிகள் விரக்தி

லாரிகள் வராததால் தஞ்சை நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.

Update: 2019-03-13 23:00 GMT
தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். தற்போது சம்பா நெல் அறுவடை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அறுவடை செய்யப்பட்ட நெல்லை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இப்படி கொள்முதல் செய்யப்படும் நெல், மூட்டைகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை மேலவஸ்தாசாவடி, அம்மன்பேட்டை, பிள்ளையார்பட்டி, புனல்குளம் ஆகிய இடங்களில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.

ஆனால் நெல் மூட்டைகளை ஏற்றி செல்லும் லாரிகளில் இருந்து நெல் மூட்டைகள் இறக்கப்படாததால் ஏற்றி செல்ல லாரிகள் இன்றி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. தஞ்சை கரந்தை பூக்குளத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க இடம் இல்லாததால் தெருவோரத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கொள்முதல் பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.

ஒரு வாரமாக நெல் மூட்டைகளுக்கு தொழிலாளர்கள் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அறுவடை முடிந்து விவசாயிகளால் கொண்டு வரப்படும் நெல், கொள்முதல் செய்யப்படாமல் தெருவோரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். இதே நிலை தான் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நீடிக்கிறது.

சேமிப்பு கிடங்குகளில் காத்து நிற்கும் லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை விரைவாக இறக்கி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்