10 மாத குழந்தையை கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

பரமத்திவேலூர் அருகே 10 மாத குழந்தையை கொலை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2019-03-13 22:15 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள ஜமீன் இளம்பள்ளியை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(வயது 34), விவசாயி. இவரது மனைவி ரேவதி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதற்கிடையே ரேவதியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரின் சகோதரர் நல்லசாமி ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ரேவதியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வனை கைது செய்தனர். பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த தமிழ்செல்வன், அவருடைய 10 மாத கைக்குழந்தை தரனேஷை கொலை செய்து விவசாய தோட்டத்தில் புதைத்து உள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஜேடர்பாளையம் போலீசார் இது தொடர்பாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த இரு வழக்குகள் விசாரணையும் நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சுசீலா வாதாடினார். இந்த வழக்குகளில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது 10 மாத குழந்தையை கொலை செய்ததற்கு தமிழ்செல்வனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இளங்கோ உத்தரவிட்டார். அதேபோல் ரேவதியை தற்கொலைக்கு தூண்டியதற்காக தமிழ்செல்வனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழ்செல்வனை போலீசார் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்