பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதிகேட்டு - அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதிகேட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-13 23:00 GMT
கடலூர்,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட மாணவிகள், பெண்களுக்கு நீதி கேட்டு நேற்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழக அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உள்ள பூமாகோவில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர்கள் வினோத், தாமோதரன், அரவிந்த் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த, சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் விரைந்து வந்து, மாணவர்களிடம் அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்தனர். இதனால் மாணவர்கள், போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பின்னர், தாங்களாகவே அங்கிருந்து கலைந்து சென்றார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி அருகில் கடலூர் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

இதன்படி நேற்று அவர்கள் கல்லூரி அருகில் ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமையில் திரண்டனர். இது பற்றி அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பால்சுதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவர்களிடம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக கூறினர்.

இதையடுத்து அவர்கள் சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்று விடுவதாக கூறினர். இருப்பினும் போலீசார் அனுமதி மறுத்தனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

அதன்பிறகு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை தாங்கினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல அமைப்பு செயலாளர் திருமாறன், மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சேகர், நகர செயலாளர் மணிவண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

தொடர்ந்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகளை கைது செய்யக்கோரியும் கோஷமிட்டனர். இதில் பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்