சேலத்தில் பரபரப்பு அங்கன்வாடி மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை ரூ.50 ஆயிரம் பறிமுதல்

சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு கணக்கில் வராத ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-03-13 21:45 GMT
சேலம்,

சேலம் அன்னதானப்பட்டி முருகன் நகரில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் உள்ள பணியாளர் ஒருவர் வாடகை பணம் வசூலிப்பதில் முறைகேடு செய்வதாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது. இந்தநிலையில் நேற்று மாலை 4 மணியளவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் மையத்தில் சோதனை நடத்துவதற்காக புகுந்தனர். இதையடுத்து உள்ளே இருந்தவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. வெளியில் இருந்தும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மையத்தில் உள்ள ஆவணங்கள், கணினியில் உள்ள பதிவுகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் அங்கு கணக்கில் வராமல் இருந்த ரூ.50 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் 22 ஒன்றியங்களில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் உள்ளனர். புறநகரில் 19 பேரும், மாநகரில் 3 பேரும் உள்ளனர். மாநகர குழந்தை வளர்ச்சி திட்டம் 1-ல் அலுவலராக பாலாம்பிகை உள்ளார். இவரின் கட்டுப்பாட்டில் உள்ள 45 மையங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்குகிறது. இதற்கான வாடகை வசூல் செய்து கொடுக்கப்படும் பணத்தில் ரூ.ஆயிரம் வரை லஞ்சம் பெற்றுள்ளார்.

குழந்தைகளுக்கு மதிய உணவிற்கான காய்கறி உள்ளிட்டவை வாங்கியதில் ரூ.500 வரை லஞ்சமாக பெற்றுள்ளார். இவருக்கு மைய அலுவலர்கள் சாந்தி, நூர்ஜகான் ஆகியோர் பணம் வசூலித்து கொடுத்துள்ளனர். இவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து பாலாம்பிகை, சாந்தி, நூர்ஜகான் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை வரை, துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்