வேதாரண்யம் பகுதியில் வாந்தி-மயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் ஆறுதல்

வேதாரண்யம் பகுதியில் வாந்தி- மயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Update: 2019-03-14 23:00 GMT
வேதாரண்யம்,

வேதாரண்யம் மற்றும் கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், அகஸ்தியன்பள்ளி, தகட்டூர் ஆகிய பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கடந்த 2 நாட்களாக வாந்தி- வாயிற்றுபோக்கு மற்றும் மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேதாரண்யம் அரசு மருத்துவமனை, கரியாப்பட்டினம், வாய்மேடு, ஆயக்காரன்புலம், வேதாரண்யம், தெற்குதலைஞாயிறு ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 500-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் ஓ.எஸ். மணியன் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் வாரியம் மூலம் வழங்கப்படும் குடி நீரால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என ஒலி பெருக்கி மூலம் சுகாதாரத்துறையினர் அறிவிப்பு செய்தனர். 

மேலும் செய்திகள்