பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து மார்த்தாண்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-16 23:00 GMT
குழித்துறை,

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்தும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சில இடங்களில் மாணவிகளை துன்புறுத்திய நபர்கள் உள்ள பேனர்களை துடைப்பத்தால் அடித்தும் தங்களுடைய எதிர்ப்பை காட்டினர். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதாகவும், அவர்கள் மீதும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே சமயத்தில், பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்ணின் பெயரை வெளியிட்ட போலீஸ் சூப்பிரண்டு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று குமரி மாவட்டம் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி முன்பு திரண்டு தரையில் அமர்ந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொள்ளாச்சி பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

சுமார் 1 மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது. பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்