தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ–மாணவிகள் 40 பேர் கைது கோபியில் பரபரப்பு

கோபியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ–மாணவிகள் 40 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-03-17 23:30 GMT

கடத்தூர்,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2017–18–ம் கல்வி ஆண்டில் பிளஸ்–2 படித்த மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவ–மாணவிகள் கோபி பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கோபி போலீசார், மாணவ–மாணவிகளிடம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை. அதனால் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று கூறினார்கள்.

ஆனால் மாணவர்கள் அனைவரும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாணவ–மாணவிகள் 40 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்