அறந்தாங்கி அருகே தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை

அறந்தாங்கி அருகே உள்ள இடைவேறியேந்தல் பகுதியில் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2019-03-17 23:00 GMT
அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், ஒரு வறட்சியான மாவட்டம் ஆகும். மாவட்ட மக்கள் பெரும்பாலானவர்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழையளவு குறைந்து கொண்டு வருகிறது. இதற்கு மாவட்டத்தில் உள்ள தைலமரங்கள் மற்றும் சீமைக்கருவேல மரங்கள் தான் என விவசாயிகள் கூறி வருகின்றனர். மேலும் அவர்கள் இதுபோன்ற மரங்களை அழித்து விட்டு பலவகை மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் கஜா புயல் தாக்கியபோது, பெய்த மழையின் காரணமாகவும், காவிரி நீர் வந்ததாலும் இந்த ஆண்டு மாவட்டத்தில் உள்ள ஒரு சில குளங்களுக்கு தண்ணீர் வந்தன. இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் நெல், கரும்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்தனர். இதேபோல அறந்தாங்கி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல் சாகுபடி செய்து உள்ளனர்.

இந்நிலையில் கஜா புயலுக்கு பிறகு போதிய மழை பெய்யாததாலும், முறையாக மின்சாரம் கிடைக்காததாலும் விவசாயிகள் தங்களது நெற் பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் அறந்தாங்கி அருகே உள்ள இடைவேறியேந்தல் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிர்கள் தண்ணீர் இன்றி கருகியது. இதனால் விவசாயிகள் வேறு வழியின்றி தங்களது வயல்களில் கால் நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, கவலை அடைந்து உள்ளனர்.

இது குறித்து விவசாயி சுப்பிரமணி கூறுகையில், நான் கடனை வாங்கி நெல் சாகுபடி செய்தேன். ஆனால் தற்போது நெற்பயிர்கள் அனைத்தும் கருகி விட்டது. சிலர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து நெல்லுக்கு பாய்ச்சி அறுவடை செய்து விட்டனர். ஆனால் எனக்கு பண வசதி இல்லை. இது குறித்து நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் வந்து எனது வயலை ஆய்வு செய்தனர்.

பின்னர் உங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் எனக்கூறிவிட்டு சென்றனர். ஆனால் இதுவரை எனக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. எனக்கு கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து பணத்தை கேட்டு வருகின்றனர். இதனால் என்னால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியவில்லை. எனவே உடனடியாக எனக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் புதிய கடன்கள் வழங்கவும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். 

மேலும் செய்திகள்