புதுக்குளத்தில் தூய்மை பணியை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே புதுக்குளம் உள்ளது. இந்த குளத்தில் கரையில் நடைபாதைகள் அமைக்கப்பட்டு, சுற்றிலும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.

Update: 2019-03-17 22:30 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே புதுக்குளம் உள்ளது. இந்த குளத்தில் கரையில் நடைபாதைகள் அமைக்கப்பட்டு, சுற்றிலும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் புதுக்கோட்டை குளத்தில் சிறுவர், சிறுமிகள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்களுடன் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் புதுக்குளத்தில் உள் பகுதி மற்றும் நடைபாதைகளில் அதிக அளவில் முட்புதர்கள் மண்டி கிடந்தன. இது குறித்து பலமுறை நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் காலையில் சமூக அமைப்புகள், இளைஞர்கள் சார்பில் புதுக்குளத்தில் தூய்மை பணி நடைபெற்றது. இந்த பணி நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. அப்போது அவர்கள் நடைபாதையில் உள்ள புட்கள், குப்பைகள் மற்றும் முட்புதர்களை அகற்றி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கணேஷ்நகர் போலீசார் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், நீங்கள் தூய்மை பணியில் ஈடுபடக்கூடாது எனக்கூறி தூய்மை பணியை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தூய்மை பணியில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், புதுக்குளத்தை நகராட்சி நிர்வாகமும் சுத்தம் செய்யவில்லை. நாங்கள் சுத்தம் செய்தாலும் நகராட்சி அதிகாரிகள் தடுத்து விடுகின்றனர். மேலும் புதுக்குளத்தில் தேக்கு மரங்கள் இருந்தன. இந்த மரங்களை காணவில்லை என அதிகாரிகள் புகார் கூறிவருகின்றனர். ஆனால் உண்மையிலேயே புதுக்குளத்தில் தேக்குமரங்கள் கிடையாது என்றனர்.

மேலும் செய்திகள்