திருச்சியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

திருச்சியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மகளுடைய காதணி விழாவுக்காக வைத்திருந்த அந்த பணத்தை பறிமுதல் செய்துவிட்டதாக தம்பதி புலம்பி சென்றனர்.

Update: 2019-03-17 23:00 GMT
திருச்சி,

தமிழகத்தில் அடுத்த மாதம் 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் உத்தரவின்படி பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

திருச்சி குழுமணி சாலை லிங்கநகர் சோதனைச்சாவடியில் நேற்று மாலை பறக்கும் படையை சேர்ந்த தாசில்தார் வசந்தா தலைமையில் சப் - இன்ஸ்பெக்டர் திருக்குமரன் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஏகிரிமங்கலம் என்ற இடத்தில் வந்த ஒரு காரை மறித்து சோதனை போட்டனர். அந்த காரில் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ், அவரது மனைவி பிரசன்ன குமாரி ஆகியோர் இருந்தனர். அவர்கள் ரூ.1 லட்சம் வைத்து இருந்தனர். அந்த பணத்திற்கு உரிய ஆவணங்களை அவர்கள் சமர்ப்பிக்காததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை திருச்சி மேற்கு தாசில்தார் ராஜவேலுவிடம் ஒப்படைத்தனர்.

சுந்தர்ராஜ்- பிரசன்னகுமாரி தம்பதி, அதிகாரிகளிடம் தங்களுடைய மகளுக்கு வருகிற 31-ந்தேதி காதணி விழா நடத்த இருப்பதால் துணிமணிகள் எடுப்பதற்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாக கூறினார்கள். காதணி விழா அழைப்பிதழையும் அதிகாரிகளிடம் காட்டினார்கள். ஆனாலும் அதிகாரிகள் பறிமுதல் செய்த பணத்தை திரும்ப வழங்கவில்லை. இதனால் அந்த தம்பதியினர் காதணி விழாவுக்காக வைத்திருந்த பணத்தையும் பறிமுதல் செய்து விட்டார்களே என்ற வேதனையுடன் புலம்பியபடி சென்றனர். இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், சொந்த காரணங்களுக்காக பணத்தை எடுத்து செல்பவர்கள் அந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான ஆதாரங்களையும் கையில் வைத்து இருக்க வேண்டும். அப்படி வைத்து இருந்தால் தான் பணம் பறிமுதல் நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியும், என்றார்கள். 

மேலும் செய்திகள்