மாற்றுத்திறனாளியிடம் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரி கைது

பட்டா மாற்றம் செய்ய மாற்றுத்திறனாளியிடம் இருந்து ரூ.1,000 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-18 23:00 GMT
வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த ஓலையூர் கிராமம் குடிகாடு பகுதியை சேர்ந்தவர் அருள்பாண்டியன்(வயது 25). மாற்றுத்திறனாளி. இவரது தந்தை ராமலிங்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது பெயரில் உள்ள நிலத்தை தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு அருள்பாண்டியன், ஓலையூர் கிராம நிர்வாக அதிகாரி சுமதியிடம் கேட்டார். அதற்கு அவர் ரூ.1,000 லஞ்சம் கேட்டார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அருள்பாண்டியன் இதுகுறித்து அரியலூர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆலோசனையில் பேரில் ரசாயனம் பூசப்பட்ட ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் அருள்பாண்டியனிடம் கொடுத்து பெண் கிராம நிர்வாக அதிகாரியிடம் கொடுக்குமாறு கூறினர். இதையடுத்து அவர், அந்த பணத்தை கிராம நிர்வாக அதிகாரி சுமதியிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து அலுவலகத்திலேயே விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்