பட்டுக்கோட்டையில் ஜவுளிக்கடையின் ‘ஷட்டரை’ உடைத்து ரூ.15 லட்சம் கொள்ளை

பட்டுக்கோட்டையில், ஜவுளிக்கடையின் ஷட்டரை உடைத்து ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-03-18 23:15 GMT
பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரிய தெருவில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையின் உரிமையாளர் மாரிமுத்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று வழக்கம்போல் காலை 9.30 மணி அளவில் கடைக்கு வந்த அவர், கடையை திறந்தார்.

அப்போது கடைக்குள் இருந்த மேஜையின் டிராயர் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ரூ.15 லட்சத்தை காணவில்லை. கடைக்குள் இருந்த கண்காணிப்பு கேமரா, புகைப்பட பதிவு கருவி ஆகியவற்றையும் காணவில்லை. கடையின் பின்பக்கத்தில் சென்று பார்த்தபோது அங்கு உள்ள ஷட்டர் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மர்ம நபர்கள் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்து ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி, இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த ஜவுளிக்கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். தஞ்சையில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் கடையில் பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.

அப்போது மோப்ப நாய், உடைக்கப்பட்ட கதவில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்றது. பின்னர் அங்கேயே நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக கண்காணிப்பு கேமரா மற்றும் புகைப்பட பதிவு கருவியையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று விட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஜவுளிக்கடை உரிமையாளர் மாரிமுத்து, பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜவுளிக்கடையின் கதவை உடைத்து ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பட்டுக்கோட்டை நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள ஜவுளிக்கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்