மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு திருவள்ளூர் கலெக்டர் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.

Update: 2019-03-18 23:00 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைவரும் தவறாமல் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் கோலப்போட்டி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். பின்னர் 100 சதவீதம் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி உறுதிமொழியை கலெக்டர் வாசித்தார். அவரை தொடர்ந்து கலெக்டர் அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அதன்பின்னர் தேர்தல் தொடர்பாக மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் நடத்தப்பட்ட விழிப்புணர்வு கோலப்போட்டியையும் கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் அதிநவீன மின்னணு விளம்பர வாகனம் மூலம் ஒளிபரப்பப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு குறும்படத்தையும், கிராமப்புற கலைஞர்கள் மூலம் நடத்தப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு நாடகத்தையும் கலெக்டர் பார்வையிட்டார்.

அதன்பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் பணிகளில் ஈடுபட பறக்கும் படையினரும், கண்காணிப்பு குழுக்களும், ஒளிப்பதிவு கண்காணிப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெறும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த தேர்தலில் 71 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. இந்த தேர்தலில் அதனை 100 சதவீதமாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் தேர்தலில் 100 சதவீதம் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். மேலும் 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு வாக்காளர்கள் தங்களின் சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குனர் ஜெயக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முகமதுரசூல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்