பாகூர் அருகே தனியார் கம்பெனி ஊழியருக்கு கத்திக்குத்து 2 வாலிபர்கள் கைது

பாகூர் அருகே பங்குனி உத்திர திருவிழாவிற்கு பணம் வசூலிப்பது குறித்த தகராறில் தனியார் கார் கம்பெனி ஊழியருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-18 22:00 GMT

பாகூர்,

பாகூர் அருகே சேலியமேடு சின்னபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 38). கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் கார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சேலியமேடு சின்னபேட் முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை நடத்த அப்பகுதி சேர்ந்தவர்களிடம் நன்கொடை வசூல் செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வசூல் செய்துவிட்டு கோவில் அருகே தனது நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த குமார் (28) மற்றும் அருண்பாண்டியன் (22), ஆகியோர் கோபாலிடம் கோவில் விழாவுக்கு பணம் வசூலித்தது குறித்து கேட்டு தகராறு செய்தனர்.

இதைத்தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த குமாரும், அருண்பாண்டியனும் சேர்ந்து கோபாலை சரமாரியாக தாக்கினார். அப்போது பேனா கத்தியால் கோபாலின் தலையில் குத்தி விட்டு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த கோபால் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சிவக்குமார், உதவி சப்–இன்ஸ்பெக்டர் அருள்மணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து குமார், அருண்பாண்டியன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்