மாவட்ட செய்திகள்
பிரதமர் மோடி வாழ்க்கை பற்றிய சினிமா 5-ந்தேதி வெளியீடு: திட்டமிட்ட தேதிக்கு ஒரு வாரம் முன்பே வருகிறது

பிரதமர் மோடி வாழ்க்கை குறிப்பு பற்றிய சினிமா படம், ஏப்ரல் 5-ந்தேதி வெளியாகிறது. திட்டமிட்ட தேதிக்கு ஒரு வாரம் முன்பே வருகிறது.
மும்பை,

பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையை மையமாக வைத்து, ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற சினிமா தயாராகி உள்ளது. மோடியின் தொடக்க காலத்தில் இருந்து அவர் முதல்-மந்திரி, பிரதமர் பதவிகளை வகித்தது வரையிலான நிகழ்வுகள், அப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

பிரபல நடிகர் விவேக் ஓபராய், மோடியாக நடித்துள்ளார். சந்தீப் சிங் தயாரிக்க, ஓமங் குமார் இயக்கி உள்ளார். போமன் இரானி, மனோஜ் ஜோ‌ஷி, பிரசாந்த் நாராயணன், ஜரினா வகாப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கிலும் வெளியாகிறது.

இந்த படம், ஏப்ரல் 12-ந்தேதி வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஒரு வாரம் முன்பே, அதாவது ஏப்ரல் 5-ந்தேதி வெளியாவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் கூறியதாவது:-

பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ஒரு வாரம் முன்பே படத்தை வெளியிடுகிறோம். மக்களிடையே இப்படத்துக்கு அன்பும், வரவேற்பும் இருப்பதால் அவர்களை நீண்டநாள் காத்திருக்க வைக்க நாங்கள் விரும்பவில்லை.

இது, 130 கோடி மக்களின் கதை. எனவே, படத்தை காண்பிக்க அவர்களை காத்திருக்க வைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்