“மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள்” அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் பிரசாரம்
“மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள்” என்று தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் கூறினார்.;
ஆலங்குளம்,
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. தபால் நிலையம் எதிரில் அமைந்துள்ள கட்டிடத்தில் நடந்த இந்த விழாவுக்கு, நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பிரபாகரன் எம்.பி. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. பி.ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன், தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து வேட்பாளர் மனோஜ் பாண்டியன், பாப்பாக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். வடக்கு அரியநாயகிபுரம், முக்கூடல், சிங்கம்பாறை, இலந்தைகுளம், கண்டப்பட்டி, மருதம்புத்தூர், மேலகுத்தப்பாஞ்சான், கீழகுத்தப்பாஞ்சான், ஆழ்வான்துலுக்கப்பட்டி, இடைகால், பள்ளக்கால், நந்தன்தட்டை, மேல பாப்பாக்குடி, கீழ பாப்பாக்குடி, ஓ.துலுக்கப்பட்டி, குமாரசாமிபுரம், இலுப்பைகுறிச்சி, வழுதூர், செங்குளம், எம்.ஜி.ஆர். காலனி ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பாப்பாக்குடி பகுதிகளுக்கு எனது தந்தையார் பி.எச்.பாண்டியன் எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும், நான் எம்.எல்.ஏ., எம்.பி.யாக இருந்தபோதும் குடிநீர் திட்டப்பணிகள், பள்ளிக்கட்டிடங்கள் போன்ற வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். தொடர்ந்து உங்களுக்கு மக்கள் பணியாற்ற எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள். உங்கள் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் பேசி பெற்றுத் தருவேன்.
தற்போது தமிழக அரசு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்கு கிடைக்க இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள். இந்த பகுதி விவசாயிகளின் பிரச்சினைகளை நான் அறிவேன். நான் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டால் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பேன்.
இவ்வாறு வேட்பாளர் மனோஜ் பாண்டியன் பேசினார்.
நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மாவட்ட அ.தி.மு.க. அவை தலைவர் வீரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜன், ஆலங்குளம் பேரூர் கழக செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பாசறை செயலாளர் சேர்மபாண்டி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் பாரதி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் முருகேசன், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜான்ரவி, பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சுயம்புலிங்கம், கீழப்பாவூர் பேரூர் கழக செயலாளர் ஜெயராமன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், தே.மு.தி.க. நகர செயலாளர் பழனி சங்கர், பா.ஜ.க. ஆலங்குளம் நகர தலைவர் கணேசன், பொதுச்செயலாளர் கண்ணன் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.