கன்னியாகுமரியில் கோடை சீசன் தொடங்கியது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

கன்னியாகுமரியில் கோடை சீசன் தொடங்கியதை அடுத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வர தொடங்கியுள்ளனர்.;

Update:2019-04-03 04:15 IST
கன்னியாகுமரி,

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்தாலும், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் பிரதான சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் சபரிமலை அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

மேலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை மற்றும் பள்ளி அரையாண்டு விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். இதற்கு அடுத்தப்படியாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் கோடை கால சீசனாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு கோடை சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கி உள்ளனர். குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

நேற்று அதிகாலையில் சூரிய உதயத்தை காண அதிக அளவு சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். மதிய வேளையில் வெயில் சுட்டெரிப்பதால் பெரும்பாலானவர்கள் விடுதிகளில் தஞ்சம் புகுகிறார்கள். சில சுற்றுலா பயணிகள் தொப்பி அணிந்தபடியும், குடை பிடித்த படியும் கடற்கரையில் வலம் வருகிறார்கள். கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்க்கவும், சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்