ராமநகர் அருகே திருமணம் முடிந்ததும் சுமலதாவுக்கு ஆதரவு திரட்டிய புதுமண தம்பதி சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

தனது மோட்டார் சைக்கிளில் மனைவி ரேஷ்மாவை ஏற்றிக் கொண்டு நாகராஜ் சென்றார். மண்டபத்தை சுற்றி புதுமண தம்பதி மோட்டார் சைக்கிளில் வலம் வந்தனர்.;

Update:2019-04-03 04:45 IST
பெங்களூரு,

ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா அருகே வசித்து வருபவர் நாகராஜ். இவர், நடிகர் அம்பரீசின் தீவிர ரசிகர் ஆவார். இந்த நிலையில், நாகராஜிக்கும், ராம நகரை சேர்ந்த ரேஷ்மாவுக்கும், 2 வீட்டு பெற்றோர்களும் பேசி திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். அதன்படி, கடந்த மாதம்(மார்ச்) 30-ந் தேதி பிடதியில் உள்ள கல்யாண மண்டபத்தில் நாகராஜிக்கும், ரேஷ்மாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மண்டபத்தில் இருந்து நாகராஜிம், ரேஷ்மாவும் மணக்கோலத்தில் வெளியே வந்தனர். பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி ரேஷ்மாவை ஏற்றிக் கொண்டு நாகராஜ் சென்றார். மண்டபத்தை சுற்றி புதுமண தம்பதி மோட்டார் சைக்கிளில் வலம் வந்தனர்.

அப்போது மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதா வெற்றி பெற வேண்டும் என்றும் சுமலதாவுக்கு ஓட்டுப்போடும் படியும் கூறி நாகராஜிம், ரேஷ்மாவும் கோஷங்களை எழுப்பினார்கள். பின்னா் அவர்கள் மண்டபத்திற்குள் சென்று விட்டனர். மண்டியா நாடாளுமன்ற தொகுதிக்குள் ராமநகர் வருவதில்லை. அப்படி இருந்தும் ராமநகரில் சுமலதாவுக்கு புதுமண தம்பதி ஆதரவு கேட்டு மோட்டார் சைக்கிளில் வலம் வந்திருந்தனர். புதுமண தம்பதி சுமலதாவுக்கு ஆதரவு கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்