நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு பொதுமக்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த பொதுமக்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.;

Update:2019-04-03 03:45 IST
வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள நல்லம்பாக்கம் கிராமத்திற்கு தாம்பரத்தில் இருந்து நல்லம்பாக்கம் கிராமம் வரை இயக்கப்பட்ட மாநகர பஸ் சாலைகள் சரியில்லாத காரணத்தால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இது வரை பஸ் இயக்கப்படவில்லை, சேதம் அடைந்த சாலையும் சீரமைக்கப்படவில்லை.

இதுகுறித்து பொதுமக்கள் பல்வேறு அதிகாரிகளை நேரில் சந்தித்து பலமுறை மனுக்களை அளித்தனர். இருப்பினும் எந்தவிதமான நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நல்லம்பாக்கம் கிராமசபை கூட்டத்தில் அதிகாரியை முற்றுகையிட்டு வருகிற நாடாளுமன்ற தேர்தலை நல்லம்பக்கம் கிராம மக்கள் அனைவரும் புறக்கணிப்போம் என்று கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வற்புறுத்தினார்கள்.

இந்த நிலையில் வருகிற 18-ந் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நல்லம்பாக்கம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்காமல் புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் அறிவித்தனர். இந்த நிலையில் நேற்று காலை கிராம மக்களிடம் அரசு அதிகாரிகள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு வண்டலூர் வருவாய் ஆய்வாளர் அமுதா தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அதிகாரி சங்கீதா, ஊராட்சி மன்ற செயலாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இளைஞர்கள், பெண்கள், முதியோர் உள்பட பலர் கலந்து கொண்டு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகளை கேட்டனர்.

மேலும் தாம்பரத்தில் இருந்து நல்லம்பாக்கம் கிராமத்திற்கு நிரந்தரமாக பஸ் போக்குவரத்தை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இதற்கு வருவாய் துறை அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரிடம் எடுத்துக்கூறி மீண்டும் பஸ் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினர். அப்போது பொதுமக்கள் ஆவேசம் அடைந்து இதேபோல் பலமுறை அதிகாரிகள் எங்களிடம் வாக்குறுதிகளை அளித்தார்கள். ஆனால் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. எனவே நாங்கள் இந்த நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்தாலும் நாங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க மாட்டோம் என்று உறுதியாக கூறினர்.

நல்லம்பாக்கம் பொதுமக்களிடையே நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அதிகாரிகள் உடனே அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். ஏற்கனவே கீரப்பாக்கம், குமிழி ஆகிய கிராமங்களில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்பதால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி வைத்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்