ஈரோட்டில் அரசு பள்ளி கழிப்பறையில் திடீரென நுழைந்து குளித்த வடமாநில வாலிபர்
ஈரோட்டில் உள்ள அரசு பள்ளி கழிப்பறையில் திடீரென நுழைந்து வடமாநில வாலிபர் குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
ஈரோடு,
ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூட வளாகத்தில் அங்கன்வாடி மையமும் உள்ளது. நேற்று மதியம் அங்கு படிக்கும் குழந்தைகளை அழைத்து செல்ல பெற்றோர்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தனர். அப்போது வடமாநில வாலிபர் ஒருவர் திடீரென பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்தார். அவர் விறுவிறுவென பெண்கள் கழிப்பறைக்குள் நுழைந்து ஆடைகளை களைந்துவிட்டு உள்ளாடையுடன் குளிக்க தொடங்கினார்.
அப்போது கழிப்பறைக்கு செல்வதற்காக 2 மாணவிகள் அங்கு வந்தனர். அவர்கள் வடமாநில வாலிபர் உள்ளே இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சுமதிக்கு தகவல் கொடுத்தனர். அவரும், அங்கிருந்த ஆசிரியைகளும், கழிப்பறையில் இருந்த வாலிபரை வெளியே வருமாறு கூறினர். ஆனாலும் அவர் வரவில்லை. இதைத்தொடர்ந்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் பள்ளிக்கூடத்துக்குள் சென்றனர்.
பின்னர் வடமாநில வாலிபரை பிடித்து அவர்கள் வெளியே கொண்டு வந்தனர். அவருடைய பெயர், முகவரியை கேட்டனர். ஆனால் அந்த வாலிபருக்கு தமிழ் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் பள்ளிக்கூடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.