ஒரே வாக்காளருக்கு 11 அடையாள அட்டைகள் வெவ்வேறு வரிசை எண்களுடன் வழங்கப்பட்டு உள்ளது

ஒரே வாக்காளருக்கு வெவ்வேறு வரிசை எண்களுடன் 11 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2019-04-03 04:15 IST

ஈரோடு,

தமிழகத்தில் வருகிற 18–ந் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு வாக்காளர்கள் தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என்று சோதனை செய்து வருகிறார்கள். வாக்காளர்களை விட அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணிக்காக வாக்காளர் பட்டியலை அக்குவேறு ஆணிவேராக ஆய்வு செய்து வருகிறார்கள்.

தங்கள் கட்சியினர் அல்லது ஆதரவாளர்கள் மற்றும் தங்கள் கட்சிக்கு வாக்களிப்பவர்கள் யாராவது விடுபட்டு விடக்கூடாது என்பதில் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கும் கட்சி நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் வாக்காளர்கள் பட்டியலை கையில் எடுத்துக்கொண்டு வீடு வீடாக சென்று வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் இருப்பதை உறுதி செய்தும், பட்டியலில் இல்லாதவர்களை நீக்க கோரியும் வருகிறார்கள்.

இந்தநிலையில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி, ஈரோடு மாநகராட்சி 2–ம் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில் இதுபோன்று வாக்காளர் பட்டியல் ஆய்வில் இருந்தபோது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இங்கு முனியப்பன் கோவில் பகுதியில் வீட்டு எண் 2 என்ற முகவரியில் குப்புசாமி த/பெ.வெங்கடாசலம் என்ற பெயர் தொடர்ச்சியாக 11 கட்டங்களில் உள்ளது. அனைத்து கட்டங்களிலும் ஒரே புகைப்படம், ஒரே முகவரி, ஒரே பெயர். ஆனால் வாக்காளர் அடையாள அட்டை எண்கள் மட்டும் வெவ்வேறாக உள்ளன.

இதுபற்றி ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் கே.என்.பாட்ஷா ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் சி.கதிரவனுக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:–

வாக்காளர் பட்டியலில் எந்த விதமான முறைகேடுகளும் நடந்து விடாமல் இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஆனால், ஒரே வாக்காளருக்கு 11 அடையாள அட்டைகள் வெவ்வேறு எண்களில் வழங்கப்பட்டு இருப்பது மிகப்பெரிய குறைபாடாக இருக்கிறது. இது தவறுதலாக அச்சானதா? வேறு உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டபோது எதிர்பாராதவிதமாக இந்த வாக்காளரின் பெயர் பதிவாகி விட்டதா? என்பதை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும். ஒரு வேளை உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தால் அவர்கள் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் போய்விடும். இது மிகப்பெரிய குளறுபடியாக மாறும். எனவே எந்த சந்தேகத்துக்கும், குளறுபடிக்கும் இடம் தராமல் வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று கலெக்டருக்கு புகார் மனு அனுப்பி இருக்கிறேன்.

இதுபோல் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, வாக்காளர் அட்டை இல்லாமல் இருந்தால் 11 ஆவணங்களை அடையாள அட்டையாக காட்டலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஆனால், ஒரே வாக்காளருக்கே 11 வாக்காளர் அடையாள அட்டை வழங்கி இருப்பது சரியா? என்கிறார்கள் பொதுமக்கள்.

மேலும் செய்திகள்