ஓமலூர் அருகே, பட்டா கேட்டு கருப்பு கொடி ஏந்தி கிராமமக்கள் ஆர்ப்பாட்டம்

ஓமலூர் அருகே பட்டா கேட்டு, கிராமமக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;

Update:2019-04-04 04:00 IST
ஓமலூர், 

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பாகல்பட்டி தேர்வீதி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த பகுதி குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான இடம் என கூறி வருவாய்த்துறையினர் பட்டா வழங்க காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதன்பின்னர் கடந்த வாரம் பட்டா கேட்டு அந்த பகுதி மக்கள் ஓமலூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு தாசில்தாரிடம் பட்டா கேட்டு மனு கொடுத்தனர். அப்போது பட்டா வழங்கவில்லை எனில் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று அந்த கிராம மக்கள் திரண்டு கருப்பு கொடி ஏந்தி கிராமத்தை சுற்றி வந்தனர். பின்னர் பாகல்பட்டி குஞ்சு மாரியம்மன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கையில் பேனர் வைத்திருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஓமலூர் தாசில்தார் குமரன் சம்பவ இடத்துக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் அதிகாரிகளிடம் பேசி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதி அளித்தார். இதையடுத்து அந்த கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்