வாலாஜா நகராட்சியை, மாநகராட்சியாக உருவாக்குவேன் பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி வாக்குறுதி
வாலாஜா நகராட்சியை, மாநகராட்சியாக உருவாக்குவேன் என பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி வாக்குறுதி அளித்துள்ளார்.;
வாலாஜா,
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி நேற்று வாலாஜா நகரத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பெருமைக்குரிய நகராட்சி வாலாஜா நகராட்சி ஆகும். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே தமிழ்நாட்டில் முதல் நகராட்சி வாலாஜா நகராட்சி. இன்று சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகியும் வாலாஜா நகராட்சியாகவே உள்ளது. சுமார் 153 ஆண்டுகளாக நகராட்சியாக இருக்கிறது. இதற்கு பின்னால் வந்த நகராட்சிகள் எல்லாம் மாநகராட்சி ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னையில் இருந்து வாலாஜாவிற்கு தான் ரெயில் இயக்கப்பட்டது.
10 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜெகத்ரட்சகன் ஏன் வாலாஜாவில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டுவர வில்லை. வாலாஜா நகராட்சியை ஏன் மாநகராட்சியாக தி.மு.க. ஆட்சியில் மாற்றவில்லை. என்னை வெற்றி பெறச்செய்தால் ஆற்காடு, ராணிப்பேட்டை, மேல்விஷாரம் ஆகிய நகராட்சிகளை ஒருங்கிணைத்து வாலாஜா நகராட்சியை, மாநகராட்சியாக உருவாக்குவேன். ராணிப்பேட்டையில் கழிவுநீரை அகற்றி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.
மத்தியிலும், மாநிலத்திலும் நிலையான ஆட்சி வர இருக்கிறது. அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் என்னை வெற்றி பெற செய்தால் வாலாஜா ரோடு ரெயில் நிலையம் மாதிரி ரெயில் நிலையமாக உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின் போது அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, வாலாஜா நகர செயலாளர் மோகன், பா.ம.க. முன்னாள் மாநில துணை பொது செயலாளர் எம்.கே.முரளி, மாநில இளைஞர் சங்க துணைத்தலைவர் ஞானசேகர், மாநில துணை அமைப்பு செயலாளர் தங்கதுரை, பா.ம.க. மாநில சட்ட பாதுகாப்பு குழு துணை செயலாளர் வக்கீல் ஜெ.ஜானகிராமன், மாவட்ட செயலாளர் கரிகாலன், மாவட்ட பசுமை தாயக அமைப்பாளர் கமலகண்ணன், வாலாஜா நகர பா.ம.க. தலைவர் இளங்கோ, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் பூட்டுத்தாக்கு நித்யா, வாலாஜா முன்னாள் நகரசபை தலைவர் வேதகிரி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி, புரட்சி பாரதம் உள்பட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.