சமூக வலைதளங்களில் தேர்தல் தொடர்பான விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை

சமூக வலைதளங்களில் தேர்தல் தொடர்பான விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் மஞ்சுநாத் பஜன்ட்ரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update:2019-04-04 04:30 IST
பெரம்பலூர்,

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் தொடர்பான பணிகள் குறித்த உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் மஞ்சுநாத் பஜன்ட்ரி தலைமை தாங்கினார்.

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர், துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி மற்றும் குளித்தலை சட்டமன்ற தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் எத்தனை பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள், நெருக்கடியான வாக்குச்சாவடிகள் உள்ளன என்பது குறித்தும், இத்தகைய வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஏதேனும் தேர்தல் விதிமீறல்கள் இருப்பின் அதுகுறித்த விவரத்தினை தனது பார்வைக்கு உடன் கொண்டு வர அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 19 ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒவ்வொரு அலுவலர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளின் விவரங்கள் குறித்தும், இதுவரை ஒவ்வொரு அலுவலரும் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும் பொது பார்வையாளர் ஆய்வு செய்தார்.

மேலும், சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்டவைகளில் தேர்தல் தொடர்பாக பதற்றம் நிறைந்த தகவல்களை பரப்புவதோ, தனிப்பட்ட ஒருவரை ஆதரித்தோ அல்லது இழிவுப்படுத்தியோ தகவல் பரப்பப்படுவதை கண்காணிக்கப்பட வேண்டும். மேலும், தேர்தல் விதிகளை மீறி தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். 

மேலும் செய்திகள்