தேர்தலை காரணம் காட்டி நிறுத்தப்பட்டுள்ள 100 நாள் வேலை உறுதி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்

தேர்தலை காரணம் காட்டி நிறுத்தப்பட்டுள்ள 100 நாள் வேலை உறுதி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.;

Update:2019-04-04 04:15 IST
பெரம்பலூர்,

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டக்குழு கூட்டம் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் அகஸ்டின், மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கலையரசி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:-

பெரம்பலூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 67 நாட்களே வேலை வழங்கப்பட்டுள்ளது. தேர்தலை காரணம் காட்டி இந்த திட்டத்தை அரசு அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். எனவே இந்த திட்டத்தை 100 நாட்களாக தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் நடைமுறையை காரணம் காட்டி குடிநீர் பிரச்சினையை தீர்க்காமல் அரசு அலுவலர்கள் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே தேர்தல் ஆணையம் தலையிட்டு குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.க. கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய, தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

மேலும் செய்திகள்