பெங்களூருவில், வழக்கில் இருந்து விடுவிக்க தொழில் அதிபரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரி உள்பட 2 பேர் கைது
பெங்களூருவில், வழக்கில் இருந்து விடுவிக்க தொழில் அதிபரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரி உள்பட 2 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.;
பெங்களூரு,
பெங்களூருவை சேர்ந்தவர் சீனிவாஸ். தொழில் அதிபர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனிவாசின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்தது. இந்த ேசாதனையின் போது சீனிவாஸ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சீனிவாஸ் மீது வருமான வரித்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் வழக்கில் இருந்து விடுவிக்க சீனிவாசிடம், வருமான வரித்துறை அதிகாரி நாகேஷ் ரூ.40 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. இதற்கு நாகேசும் ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் நேற்று மாலை சீனிவாஸ் தனது உதவியாளர் ஒருவரிடம் ரூ.40 லட்சம் லஞ்சத்தை கொடுத்து அனுப்பினார்.
அந்த பணத்தை பெங்களூரு ஜெயநகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வைத்து நாகேசும், அவருடன் வந்த ஒருவரும் பெற்று கொண்டனர்.
இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த ஓட்டலுக்கு விரைந்து சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் நாகேசையும், அவருடன் வந்த ஒருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த ரூ.40 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைதான 2 பேரிடமும் சி.பி.ஐ.அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.