மாவட்டத்தில், அரசு பொதுத்தேர்வில் விதிமீறல்; 25 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த அரசு பொதுத்தேர்வில் விதிமீறலில் ஈடுபட்ட 25 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.;

Update:2019-04-04 04:29 IST
கடலூர்,

தமிழகம் முழுவதும் பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வுகள் சமீபத்தில் முடிவடைந்தன. இந்த தேர்வை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.

213 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் உள்பட பல்வேறு நிலையில் ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்கள் தேர்வில் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடுகிறார்களா? என்பதை கண்காணித்தனர். இருப்பினும் காப்பி அடித்ததாக 3 மாணவர்கள் பிடிபட்டனர். இந்நிலையில் தேர்வின் போது 7 தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் தேர்வில் விதிமீறலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது.

அதாவது தனியார் பள்ளி பணியாளர்களை தேர்வு மையத்துக்குள் அனுமதித்தது போன்ற பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமியிடம் கேட்ட போது, தேர்வில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக 7 முதன்மை கண்காணிப்பாளர்கள், 3 துறை அலுவலர்கள், 15 அறை கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 25 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் ஒரு சிலர் விளக்கம் அளித்துள்ளனர். முழுமையான விளக்கத்தை பெற்றதும் அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்