புறப்பட்டு செல்லும் நேரம் தொடர்பான பிரச்சினை: தனியார் பஸ் நிறுவன மேலாளர் மீது பீர் பாட்டில் தாக்குதல் 5 பேர் கைது

திருப்பூர் பழைய பஸ்நிலையத்தில் பஸ் புறப்பட்டு செல்லும் நேரம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தனியார் பஸ் நிறுவன மேலாளர் பீர் பாட்டிலால் தாக்கப்பட்டார். இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2019-04-06 04:15 IST

திருப்பூர்,

திருப்பூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி செல்வது தொடர்பாக தனியார் பஸ் டிரைவர்கள்– நடத்துனர்களுக்கு இடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளாக பணியாற்றும் கோபி கிருஷ்ணன் என்பவர், அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்சில் வசூலான பணத்தை நடத்துனரிடம் இருந்து பெறுவதற்காக பழைய பஸ்நிலையம் சென்றார். அப்போது அவரிடம், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வேறு சில தனியார் பஸ் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் நேரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். பஸ்நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட பஸ்கள் புறப்பட நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்தில் டிரைவர்கள் பஸ்சை எடுத்து செல்லாமல் தாமதமாக செல்வதாகவும், இதனால் தங்களில் வசூல் பாதிக்கப்படுவதாகவும் வாக்குவாதம் செய்தனர்.

இந்த வாக்குவாதம் முற்றி, கோபி கிருஷ்ணன் மற்றும் இவருடைய நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்சில் பணியாற்றும் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கும், மற்ற தனியார் நிறுவன பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த மற்ற தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் அங்கு கிடந்த பீர் பாட்டிலை எடுத்து தனியார் பஸ் மேலாளர் கோபி கிருஷ்ணனை தாக்கியுள்ளனர். இதில் அவருடைய தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அவர் அங்கேயே மயங்கி கீழே விழுந்தார்.

உடனே அவரை மீட்ட அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் படி கோபி கிருஷ்ணனை தாக்கியதாக தனியார் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் வினோத் குமார்(வயது 23), மூர்த்தி(32), மதியழகன்(27), முத்து(24), சதீஷ்(27) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்