மைசூரு தொகுதியில், 9-ந் தேதி மோடி-ராகுல் காந்தி போட்டி பிரசாரம் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கர்நாடகத்தில் முதல்கட்ட நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கிறது. மைசூருவில் வருகிற 9-ந் தேதி அன்று பிரதமர் மோடியும், ராகுல்காந்தியும் போட்டி பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.;

Update:2019-04-06 03:44 IST
மைசூரு,

கர்நாடகத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதி களுக்கு 2 கட்டங் களாக தேர்தல் நடக்கிறது.

ராகுல்காந்தி

முதல்கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 18-ந் தேதியும், 2-வது கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 23-ந் தேதியும் நடக்கிறது. தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளின் தலைவர்களும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் காங்கிரஸ் சார்பில் மைசூரு-குடகு தொகுதியில் போட்டியிடும் விஜய்சங்கரை ஆதரித்தும், சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிடும் துருவநாராயணை ஆதரித்தும், மற்ற தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் வருகிற 9-ந் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி மைசூருவில் பிரசாரம் செய்கிறார். இதற்காக மைசூரு ரெயில் நிலையம் அருகே அமைந்துள்ள ஜே.கே. மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி

இதற்கிடையே வருகிற 8-ந் தேதி பா.ஜனதா சார்பில் மைசூரு-குடகு தொகுதியில் போட்டியிடும் பிரதாப் சிம்ஹாவை ஆதரித்தும், சாம்ராஜ்நகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சீனிவாச பிரசாத்தை ஆதரித்தும் பிரதமர் நரேந்திர மோடி மைசூருவில் பிரசாரம் செய்ய இருந்தார். ஆனால் அவர் 8-ந் தேதி மைசூருவுக்கு வருவதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 9-ந் தேதி மைசூருவுக்கு வந்து பிரசாரம் செய்வார் என்று பா.ஜனதா முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடியின் வருகைக்காக மைசூரு மகாராஜா கல்லூரியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் குவிப்பு

இப்படி ஒரே நாளில் இருபெரும் தலைவர்களும் மைசூருவுக்கு வந்து போட்டி பிரசாரம் மேற்கொள்ள இருப்பதால் இப்போதே மைசூரு நகரம் பரபரப்பாகி உள்ளது. காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கூட்டணியினர் ஒருபுறமும், பா.ஜனதாவினர் ஒருபுறமும் தங்களுடைய தலைவர்களின் வருகைக்காக தடபுடலாக ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

மைசூரு நகரம் முழுவதும் பேனர்கள், கட்சி கொடிகள், தோரணங்களை கட்டி வருகிறார்கள். மேலும் இருபெரும் முக்கிய தலைவர்கள் மைசூருவுக்கு ஒரே நாளில் வருவதால் அங்கு அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க இப்போதே போலீசார் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.

விழாக்கோலம் பூண்டது

மேலும் முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள். இதனால் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டதுபோல் காட்சி அளிக்கிறது. மேலும் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே இருப்பதால் முதல் கட்ட தேர்தல் களமும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.

மேலும் செய்திகள்