தாதாவின் பெயரை கூறி தொழில் அதிபரிடம் ரூ.25 லட்சம் பறிக்க முயன்ற வாலிபர் கைது
தாதாவின் பெயரை கூறி தொழில் அதிபரிடம் ரூ.25 லட்சம் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
மும்பை,
மும்பை மேற்கு புறநகரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கு அண்மைகாலமாக செல்போனில் மிரட்டல் அழைப்பு வந்து கொண்டு இருந்தது. அதில், எதிர்முனையில் பேசிய நபர் தன்னை தாதா எஜாஸ் லக்டாவாலாவின் கூட்டாளி என கூறினார். மேலும் அவர் தொழில் அதிபரிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தொழில் அதிபர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
வாலிபர் கைது
இதில், தொழில் அதிபரிடம் பணம்கேட்டு மிரட்டிய ஆசாமி பாந்திரா பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் சாகர் சதிஸ்குமார் யாதவ் (வயது21) என்பது தெரியவந்தது. அவர், கடந்த மாதம் கைதான தாதா எஜாஸ் லக்டாவாலாவின் சகோதரர் அகில் லக்டாவாலாவுடன் தொடர்பில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.