மசினகுடி அருகே தெருநாய்கள் துரத்தியதில் புள்ளி மான் காயம் வனத்துறையினர் மீட்டனர்
மசினகுடி அருகே தெருநாய்கள் துரத்தியதில் காயம் அடைந்த புள்ளி மானை வனத்துறையினர் மீட்டனர்.;
மசினகுடி,
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை வறட்சி நிலவுகிறது. வனப்பகுதியில் மரம், செடி, கொடிகள் காய்ந்து வருவதுடன், நீர்நிலைகளும் வற்ற தொடங்கி விட்டன. இதனால் வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை மசினகுடி அருகே வாழைத்தோட்டம் வனப்பகுதியில் இருந்து புள்ளி மான் கூட்டம் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன. இதனை கண்ட தெருநாய்கள் புள்ளிமான் கூட்டத்தை துரத்தி சென்றன. அப்போது புள்ளி மான்கள் வனப்பகுதிக்குள் தப்பி ஓடின. ஆனால் பிறந்து சில மாதங்களே ஆன புள்ளிமான் குட்டி மட்டும் குடியிருப்பு பகுதியில் சிக்கி கொண்டது. தெருநாய்களிடம் இருந்து தப்பிக்க முயன்று புள்ளி மான் குட்டி குடியிருப்பு பகுதியில் அங்கும், இங்குமாக ஓடியது.
இதனை கண்ட வாழைத்தோட்டம் பொதுமக்கள் தெருநாய்களை விரட்டியடித்தனர். பின்னர் சிங்காரா வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சிங்காரா வனவர் பீட்டர் பாபு தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் புள்ளி மான் குட்டியை மீட்டனர். அப்போது தெருநாய்கள் துரத்தியதில் புள்ளி மான் குட்டிக்கு காயம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதனை மசினகுடி கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு புள்ளி மான் குட்டியின் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டது. பின்னர் சிங்காரா வனப்பகுதிக்கு உட்பட்ட கல்லல்லா வனப்பகுதியில் அந்த புள்ளி மான் குட்டி பத்திரமாக விடப்பட்டது.