ஜனதாதளம்(எஸ்) கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்களுடன் குமாரசாமி ரகசிய ஆலோசனை - வெற்றிக்கான வியூகம் குறித்து விவாதித்தனர்

மண்டியாவில் மகன் நிகிலுக்கு காங்கிரசார் ஆதரவு வழங்க மறுத்ததால், ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களுடன் குமாரசாமி நேற்று ரகசிய ஆலோசனை நடத்தினார். இதில் வெற்றிக்கான வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.;

Update:2019-04-09 04:32 IST
பெங்களூரு,

கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதி களுக்கு வருகிற 18, 23-ந்தேதிகளில் இருகட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் மைசூரு-குடகு, மண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வருகிற 18-ந்தேதி ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதனால் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

குறிப்பாக மண்டியா தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் போட்டியிடு கிறார். அவரை எதிர்த்து நடிகை சு மலதா சுயேச்சையாக களமிறங்கியுள்ளார். இவருக்கு பா.ஜனதா ஆதரவு வழங்கியுள்ளது. இதனால் இந்த தொகுதியில் நிகில் குமாரசாமி, சுமலதா இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

அதே வேளையில் மண்டியா தொகுதியை ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு விட்டுக்கொடுத்ததால் காங்கிரசார் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் நிகில் குமாரசாமிக்கு ஆதரவு வழங்க மறுத்துள்ளனர். மேலும் சுயேச்சையாக போட்டியிடும் நடிகை சுமலதாவுக்கு ஆதரவாக காங்கிரசார் கொடி பிடித்து வருகிறார்கள். இதனால் நிகில் குமாரசாமியின் வெற்றிக்கு பின்னடைவு ஏற்படுமோ? என குமாரசாமியும், ஜனதாதளம் (எஸ்) கட்சியினரும் கலக்கமடைந்துள்ளனர்.

இதனால், மண்டியாவில் நிகில் குமாரசாமியை வீழ்த்த பா.ஜனதா- காங்கிரஸ் கைகோர்த்துள்ளதாக குமாரசாமியும், சித்தராமையா நேரில் வந்து சமாதானப்படுத்தினாலும் மண்டியாவில் நிலவும் கருத்துமோதல் தீராது என்று தேவேகவுடாவும் பகிரங்கமாக தெரிவித்தனர்.

அத்துடன் இந்த விவகாரம் குறித்து குமாரசாமி, காங்கிரஸ் மேலிட தலைவர் கே.சி.வேணுகோபாலிடம் புகார் தெரிவித்தார். உடனே அவர், முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான சித்தராமையாவிடம், மண்டியா மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை சமாதானப்படுத்தி, கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட அறிவுறுத்தும்படி உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று முன்தினம் சித்தராமையா, மண்டியா மாவட்ட காங்கிரசாரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் தேர்தல் களத்தில் எப்போதும் எதிர்த்து நின்று பழக்கப்பட்டவர்களுடன் கைகோர்க்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதனால் இந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இனியும் தாமதித்தால் நிலைமை மோசமடையும் என நினைத்த குமாரசாமி, தனது மகனின் வெற்றிக்காக தானே களத்தில் இறங்கி வேலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி நேற்று முதல்-மந்திரி குமாரசாமி மண்டியா சென்றார். மண்டியா மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களுடன் (8 பேரும் ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள்) ரகசிய ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது தற்போதைய நிலையில் நிகிலுக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு, சுயேச்சை வேட்பாளர் சுமலதாவின் ஆதரவு, நிகிலின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்பது பற்றி குமாரசாமி கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுபோல் மண்டியா நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே இருப்பதால், தேர்தல் பிரசாரத்தை மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்துவது எனவும், வீடு, வீடாக சென்று வாக்குகளை சேகரிப்பது உள்பட பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

மேலும் செய்திகள்