கி.வீரமணி காரில் கல் வீசியவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சென்ற காரில் கல் வீசி தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2019-04-09 22:45 GMT

திருப்பூர்,

திருப்பூர்–தாராபுரம் ரோட்டில் உள்ள கரட்டாங்காடு பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து நேற்று முன்தினம் மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜுடன் காரில் வந்தார்.

இதை அறிந்த மர்ம நபர்கள், அவர்கள் இருவரும் வந்து கொண்டிருந்த காரின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

திடீரென கார் மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதையடுத்து தடியடி நடத்தி அங்கு கூடி நின்றவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர். அதைத்தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்த புகாரின் பேரில் கி.வீரமணி சென்ற கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியவர்கள் மீது பொது சொத்துக்களை சேதப்படுத்துதல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அடையாளம் கண்டு அவர்களின் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்