22 சட்டசபை தொகுதிகளிலும் வெற்றி பெற்று கருணாநிதி பிறந்த நாளில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்க வாய்ப்பு

22 சட்டசபை தொகுதிகளிலும் வெற்றி பெற்று கருணாநிதி பிறந்த நாளில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்க வாய்ப்பு உள்ளது என தஞ்சையில், உதயநிதி ஸ்டாலின் கூறினார்.;

Update:2019-04-11 04:45 IST
தஞ்சாவூர்,

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மற்றும் தஞ்சை சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோரை ஆதரித்து தஞ்சை அண்ணாநகர் மார்க்கெட், மானாம்புச்சாவடி, கீழவாசல் மார்க்கெட், வடக்குவாசல் நால்ரோடு, மாமாசாகிப்மூலை, மருத்துவக்கல்லூரி 3-வது கேட், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நான் பிரசாரத்திற்கு செல்லும் எல்லா இடங்களிலும் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழகத்தில் எல்லா இடங்களை விடவும் தஞ்சையில் வரவேற்பு அமோகமாக உள்ளது. நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள். மோடிக்கு கெட் அவுட் சொல்ல தயாராகி விட்டார்கள். மத்தியில் 5 ஆண்டுகள் ஆட்சி செய்த மோடி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. வெளிநாடுகளில் தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதுவரை 50 நாடுகளை சுற்றி வந்துள்ளார். அதற்கான விமான செலவு ரூ.5 ஆயிரம் கோடியாகும். இது யார் பணம்? மக்களுடைய வரிப்பணமாகும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க மோடி வரவில்லை. தமிழக முதல்-அமைச்சரும் ஹெலிகாப்டரில் வந்து சென்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையையும் மத்திய அரசு முழுமையாக வழங்கவில்லை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் தான் மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.

என்றைக்கும் மக்களுடன் இருப்பது தி.மு.க. தான். அந்த உரிமையுடன் வாக்கு கேட்டு வந்து இருக்கிறோம். ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என மோடி வாக்குறுதி அளித்தார். 10 காசாவாது வந்ததா? இல்லை. மக்களுக்கு அவர், நாமத்தை போட்டு விட்டார். வருகிற 18-ந் தேதி மக்கள் அனைவரும் மோடிக்கு நாமம் போட வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரி மூலம் 2 கோடி பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என மோடி அறிவித்தார். ஆனால் 10 கோடி பேர் வேலையை இழந்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த மக்கள் போராட்டத்தை அடக்க 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதை யாரும் மறந்துவிடக்கூடாது.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் செய்த சாதனைகள் என்ன? என்று கேள்வி எழுப்பினால் எனது ஆட்சியில் தான் 35 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. வேறு எந்த ஆட்சியிலும் இப்படி போராட்டங்கள் நடைபெற்றது இல்லை என கூறுகிறார். அப்படிப்பட்ட முதல்- அமைச்சர்தான் தமிழகத்தில் உள்ளார். இவரை முதல்- அமைச்சராக தேர்வு செய்யவா மக்கள் வாக்களித்தார் கள். ஜெயலலிதாவை முதல்- அமைச்சராக்கத்தான் மக்கள் வாக்களித்தனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா காலை பிடித்து முதல்-அமைச்சர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார். மோடியின் காலை பிடித்து ஆட்சியை காப்பாற்றி கொண்டு இருக்கிறார். கருணாநிதியின் மகன் என்ற தகுதியை தவிர வேறு என்ன தகுதி மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்கிறார். தனது 13-வது வயதில் மாணவர் மன்றத்தை தொடங்கி படிப்படியாக ஒவ்வொரு பொறுப்புக்கும் வந்து 50 ஆண்டுகால உழைப்புக்கு பிறகு தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் வந்து இருக்கிறார். 5 முறை முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி மரணம் அடைந்தபோது அவரை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தின் அருகே அடக்கம் செய்யக்கூட இடம் ஒதுக்க எடப்பாடி பழனிசாமி மறுத்து விட்டார். நீதிமன்றத்திற்கு சென்று மெரினா கடற்கரையில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்ற உத்தரவை பெற்றோம். இந்த தேர்தல் கருணாநிதிக்கு செய்யும் கண்ணீர் அஞ்சலி, நினைவஞ்சலியாகும்.

அவர் கொடுத்துவிட்டு சென்ற வெற்றி சின்னமான உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். வருகிற 18-ந் தேதி 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. மே மாதம் 19-ந் தேதி 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்த 22 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்று ஜூன் 3-ந் தேதி கருணாநிதி பிறந்த நாளில் தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க வாய்ப்பு உள்ளது. அந்த வாய்ப்பை நீங்கள் அளிக்க வேண்டும். மோடியையும், எடப்பாடி பழனிசாமியையும் வீட்டுக்கு அனுப்ப தி.மு.க. வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்