மு.க.தமிழரசு, நடிகர் அருள்நிதி வீதி, வீதியாக பிரசாரம் தி.மு.க.வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவு திரட்டினர்

திருவாரூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு மு.க.தமிழரசு, நடிகர் அருள்நிதி ஆகியோர் வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்தனர்.;

Update:2019-04-12 04:30 IST
திருவாரூர்,

திருவாரூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணனை ஆதரித்து மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு, நடிகர் அருள்நிதி ஆகியோர் திருவாரூர் பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

முன்னதாக திருவாரூர் விளமலில் இருந்து திறந்த ஜீப்பில் புறப்பட்டு வன்மீகபுரம், ரெயில்வே காலனி, கே.டி.ஆர். நகர், பைபாஸ் சாலை, காந்தி சாலை, கிடாரங்கொண்டான் உள்பட பல்வேறு பகுதிகளில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.


கிடாரங்கொண்டான் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவர்களிடம், உதயசூரியன் சின்னத்திற்கு இருவரும் வாக்கு சேகரித்தனர். அப்போது மாணவ–மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் நடிகர் அருள்நிதியுடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர்.

இதனைதொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் நடிகர் அருள்நிதிக்கு அணிவிப்பதற்காக மாலையுடன் நின்று கொண்டிருந்தார். அதைப்பார்த்த நடிகர் அருள்நிதி அந்த சிறுமியை தூக்கி தனக்கு போட இருந்த மாலையை வேட்பாளர் பூண்டி கலைவாணன் கழுத்தில் போட வைத்தார்.


கருணாநிதியின் மகனும், பேரனும் பிரசாரத்திற்கு வருவதை அறிந்த பொதுமக்கள் வழிநெடுகிலும் ஆர்வத்துடன் காத்திருந்து இருவரையும் வரவேற்றனர். பல இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கைவிரல்களை விரித்து ஆராவாரம் செய்தனர்.

வேட்பாளருடன் முன்னாள் எம்.பி. விஜயன், நகர செயலாளர் பிரகாஷ், நிர்வாகிகள் தியாகபாரி, ரஜினிசின்னா, கருணாநிதி ஆகியோரும் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்